|
உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான HKIA தொடர்பான படங்கள் மேலே உள்ளன. இந்த சர்வதேச விமான நிலையம் "ஹொங் கொங்க்" நாட்டிலுள்ளது. "ஹொங்கொங்க் சர்வதேச விமான நிலையம்" Hong Kong International Airport (HKIA) உலகின் பிரபலமான விமான நிலையங்களில் மிக முக்கியமானது.
"ஹொங் கொங்க்" விமானநிலையம் 6 வருடகாலத்தில் கட்டப்பட்டு 1998 ஜூலை 6 ம் திகதி திறக்கப்பட்டது. விமான கட்டுமானத்திலும் கட்டிடகலையிலும் மிகப்பெரும் சாதனை என வர்ணிக்கப்படும் அளவிற்கு மிகப் பெரியதும் சவால்கள் பல சந்தித்ததுமான கட்டுமானமாக HKIA உள்ளது. உலகின் கவனத்தினை ஈர்த்துள்ள மேற்படி விமான நிலையமானது ஹொங்கொங்கின் இரு சிறிய தீவுகளை ஒன்று சேர்த்து உருவாக்கிய செயற்கை தீவில் உருவாக்கப்பட்டது மிகப் பெரும் கட்டுமான சாதனையாக பேசப்படுகின்றது. ஹொங்க்கொங்க் அரச நிவாகத்தின் கீழான விமான நிலைய கட்டுமானமானது நான்கு மிகப்பெரிய முதலீட்டாளர்களினால் 225 கட்டுமான நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. பூர்த்தியாகியுள்ள ஹொங்கொங்க் விமானநிலைய கட்டுமானத்திற்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளனர். மேற்படி பெரும் தொகை செலவு உலகின் எந்த விமான கட்டுமானத்திலும் இதுவரை செல்லவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
HKIA விமான நிலையமானது "செக் லப் கொக்" (Chek Lap Kok) என முன்பு அறியப்பட்டது. 1925 ம் வருடத்திலிருந்து "செக் லப் கொக்" தீவில் இயங்கிவந்த விமானநிலையமானது அதிகரித்த தேவை , போதிய ஓடுபாதை வசதி இன்மை கருதி முழுமையாகவும் நவீனமாகவும் HKIA எனும் பெயரில் வடிவமைக்கப்பட்டது. 1974 ம் வருடத்திலிருந்து விமானவிஸ்தரிப்புத் திட்டத்திற்கு பல திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் இரு தீவுகளை இணைத்து விஸ்தரிக்கும் திட்டம் இறுதியான தீர்வாகியது. மேற்படி திட்டத்தில் Chek Lap Kok (3.02 சதுர கிலோ மீற்றர் ) தீவகத்தினையும் Lam Chau (0.08 சதுர கிலோ மீற்றர்) தீவகத்தினையும் பிரிக்கும் நீர்பகுதி பரப்பு 9.38 சதுர கிலோ மீற்றர் பிரதேசமானது கடலடி மணல் மூலம் நிரப்பப்பட்டு 12.48 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணமுள்ள புதிய தீவு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட புதிய தீவானது ஹொங்கொங்க் நாட்டின் முழுமையான நிலப்பரப்பினை 1% இனால் அதிகரித்துள்ளது.
உலகின் பிரபல விமான நிலையங்கள் வரிசையில் 24 மணி நேரமும் இயங்கும் இந்த விமான நிலையமானது திறக்கப்பட்ட காலத்தில் உலகின் மிகப்பெரிய பயணிகள் கூடம் (terminal) , உலகின் மிகவும் சுறு சுறுப்பான விமான நிலையம் என பட்டியலில் முதலிடத்தில் இருந்த போதிலும் தற்போது சற்று பின் தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களுள் முதல் தரவரிசையில் இருக்கும் இவ் விமான நிலையமூடாக 2009 ம் ஆண்டில் மட்டும் 46 மில்லியன் மேலான பயணிகள் பயணித்துள்ளனர். 2009 ம் வருடத்தில் உலகின் 5 வது சுறுசுறுப்பான விமான நிலையம் எனும் பெயரை தக்கவைத்துள்ள இந்த விமான நிலையம் உலகின் மிகப்பெரிய terminal ஐ கொண்டுள்ளது வரிசையிலும் 3 வது எனும் சிறப்பு இடம் பிடித்துள்ளது. அத்துடன் உலகின் மிகச்சிறந்த விமானநிலைய வரிசையில் முதல் இடத்தினை பலமுறை வென்றுவிட்ட HKIA தொடர்பிலான இதர தரவுகள் சுருக்கமாக கீழே தரப்படுகின்றன.
- இரண்டு சமாந்தர ஓடுபாதைகளை HKIA விமானநிலையம் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 3800 மீற்றர் நீளமும் 60 மீற்றர் அகலமும் உடையன.
- விமானநிலைய பயணிகள் கூடம் (terminal) நிலப்பரப்பு 570,000 சதுர மீற்ரர்கள்.
- தினமும் 90 விமான நிறுவனங்களினால் 150 வெளிநாட்டின் விமான நிலையங்களுக்குரிய சேவை நடைபெறுகின்றது.(150 நாட்டு நகரங்கள் தவிர 40 சீன நாட்டு நகரங்களுக்கும் இங்கிருந்து சேவை நடை பெறுகின்றது.)
- ஒரு மணித்தியாலத்தில் ஓடு பாதைகள் மூலமாக 57 விமானங்கள் அதிக பட்சமாக உபயோகிக்கின்றன.
- இங்கு உள்ள இருக்கைகள் எண்ணிக்கை16,500 மற்றும் 118 மலசல கூடங்களும் அமைக்கப் பட்டுள்ளன.
- உலகின் விமான பொதி பரிவர்த்தனையில் (cargo traffic) பல காலம் முதலிடத்திலும் தற்போது 2 ம் இடத்திலும் இருக்கும் இந்த விமான நிலையமூடாக 2008 இல் 3.6 மில்லியன் தொன் பொதி பரிமாறப்பட்டுள்ளது.
- 24 மணி நேரமும் இயங்கும் இந்த விமான நிலையத்தில் 60,000 மக்கள் வேலை பார்க்கின்றனர்.
- HKIA இல் மொத்தமாக 70 விமான உள்புகும் வழிகள் (boarding gates) உள்ளன.
- விமான நிலையத்தில் மொத்தமாக 288 பயணிகள் கையாளும் நிலைகள் (check-in ) மற்றும் 200 மேலான குடிவரவு, சுங்க அலுவல்கள் நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- விமான நிலையத்தின் உள்ளகத்தில் அமைந்துள்ள 120 கடைத்தொகுதிகளை இலகுவில் சென்றடையவென 2.5 கிலோ மீற்றர் தூரமுள்ள நகரும் நடைபாதை (moving walkways) அமைக்கப்பட்டுள்ளது.
- தொடர்ச்சியாக விஸ்தரிப்புக்கு உட்பட்டுவரும் HKIA இன் இரண்டாவது terminal 2007 ம் வருடம் பெப்ரவரியில் திறக்கப்பட்டது. இந்த புதிய terminal உடன் மிகப்பெரிய நவீன பல் தேவை கட்டிட தொகுதி Sky Plaza ம் திறக்கப்பட்டுள்ளது.(160 கடைகள், 40 உணவகம் மற்றும் 1000 அறைகளைக் கொண்ட 5 நட்சத்திர ஹொட்டல் வசதியுடன் 39,000 m2 அமைந்துள்ள Sky Plaza பற்றி விபரிக்க இந்தப் பக்கம் போதாது!.)
- விமான நிலையத்தினை கடல் , நிலம் , வான் என மூன்று வழிகளில் அடையலாம். அத்துடன் விமான நிலையத்தினுள் இலவசமாக தன்னியக்கத்தில் மணிக்கு 62 கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் தொடர்வண்டிகளில் (90 செக்கனுக்கு ஒன்று எனும் வீதத்தில்) பயணிக்கும் புதிய வசதியும் உண்டு.
- விமான பொதிகளாவன புதிய தொழில் நுட்பமான "வானெலி அலை" மூலமான அடையாள முறை (Radio frequency identification) புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பொதி இருக்கும் இடம் தூரத்தில் இருந்து அறியப்படும் வசதி உள்ளது.
- பொதி தள்ளும் வண்டில்கள் எண்ணிக்கை 10,500 என்பதுடன் 3,200 கார் தரிப்பிட வசதியும் செய்யப் பட்டுள்ளது.
- மிகச்சிறந்த விமான நிலையத்திற்கான உலக விருதுகளை 2002 , 2003 , 2004 , 2005 ம் வருடங்களிலும் சிறப்பு விருதினை 2007 இலும் HKIA பெற்றுள்ளது.
- உலகின் மொத்த சனத்தொகையின் அரை பங்கினர் 5 மணி மணிநேர விமான பயணத்தில் அடையும் தூரத்தில் HKIA அமைந்துள்ளது.
- இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் பெரும் பகுதி கண்ணாடியினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் சீற்றங்களின் போது இலகுவில் கண்ணாடிகள் உடைந்து நொருங்கி முதன்மை கட்டுமானத்தினை பாதுகாக்கும் வண்ணமும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தினமும் சராசரி 750 விமானங்களை கையாளும் HKIA ஆனது மேலும் 6.4 பில்லியன் டொலர் ($HKD 50 billion) மதிப்புள்ள எதிர்கால விஸ்தரிப்புக்களை 2030 ம் ஆண்டுவரை முன்னெடுக்கவுள்ளது.(புதிய திட்டத்தில் 3 வது ஓடு பாதை உள்ளிட்ட பல வகை திட்டங்கள்.)
[குறிப்பு 1 : உலகின் மிகப்பெரிய பயணிகள் கூடம் கொண்டுள்ள ஏனைய இரு விமான நிலையங்களும் சீன Beijing Capital International Airport's Terminal 3 (986,000 m²) ,டுபை Dubai International Airport's Terminal 3 (1,500,000 m²) என்பனவாகும். மேற் குறிப்பிடப்படும் இரு விமான நிலையங்களும் 1998 ம் வருடத்தின் பின்பே திறக்கப்பட்டனவாகும்.]
[குறிப்பு 2 : 1997 ம் ஆண்டுவரை பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் ஹொங்க்கொங்க் இருந்த காலத்தில் விமானநிலைய கட்டுமானம் இருந்த போதிலும் 1998 ம் வருட விமான திறப்பு சீனாவிடம் வந்துவிட்டதையும் விமான வரலாறு பதித்துள்ளது.]
[குறிப்பு 3 : HKIA கட்டுமானத்திற்கு US$20 billion பணத்தினை இதுவரை செலவிட்டுள்ளனர். இந்த பணத்தின் உத்தேச மதிப்பு இந்திய ரூபாயில் 93,000 கோடி அல்லது இலங்கை மதிப்பில் 230,000 கோடி ரூபாய் எனவும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகையில் 2030 ம் வருடம் வரை செலவிடப்படும் மேலதிக செலவுகள் சேர்க்கப்படவும் இல்லை என்பதையும் கவனிக்கவும். ]
[குறிப்பு 4 : இந்த விமானநிலைய கட்டுமான திட்டமிடல் , பிரமிப்பூட்டும் வேலைத்திட்டம் அனைத்தும் சொற்களில் வடிக்கமுடியாத அபார சாதனை. இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கட்டுமானமாக இந்த விமானநிலைய கட்டுமானம் விபரிக்கும் விடையம் கீழ் உள்ள வீடியோவை பார்ப்பதால் மட்டும் புரியும் !. ]
உலகில் மிகச்சிறந்ததும் அதிக செலவில் கட்டப்பட்டதுமான HKIA பற்றிய காட்சிகள் .
Hong Kong International Airport and Sunset Peak in 360
மேலுள்ள தகவல் தொடர்புடைய வீடியோ (youtube) காட்சி
airport-technology
wikipedia.org
map
|